சென்னை:
காவல்துறை தலைவர் அலுவலகமான டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் 8 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 8 பேர் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக கோயம்பேடு சந்தை உருவாகி இருப்பது தெரியவந்துள்ள நிலையில், சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பல காவல்துறையினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்
சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிவர் உள்பட 8 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த காவலர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு ஓமந்தூரால்பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.
அண்மையில் அண்ணாநகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர் துணை கமிஷனரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதற்கிடையே சென்னை சூளைமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் சென்ற ரோந்து வாகன ஓட்டுனருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது உதவி ஆய்வாளருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து டிஜிபி அலுவலகம் முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் தினமும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து வருகிறார்கள்.
Patrikai.com official YouTube Channel