டெல்லி: வெளிநாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை, தாய்நாடு திரும்ப அழைத்து வரும் நடவடிக்கையாக அதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்கா, சிங்கப்பூர், வளைகுடா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள இந்தியர்கள் தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
அவர்களுக்கான அனுமதியை உள்துறை அமைச்சகம் தற்போது வழங்கி உள்ளது. அதற்கான சில விதிமுறைகளையும் அறிவித்துள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் வர விரும்பும் இந்தியர்கள் எங்கு உள்ளனரோ அங்குள்ள தூதரகங்களில் முதலில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
முன்பதிவில்லாத விமானங்கள் தான் அவர்களின் பயணத்துக்கு ஒதுக்கப்படும். கோவிட் 19 தொற்று அல்லாதவர்கள் தான் அதை இயக்குவார்கள். வெளிநாடுகளில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், குறைந்த விசாக்காலத்தில் சென்றிருப்பவர்கள், மருத்துவ அவரச உதவி வேண்டுவோர், கர்ப்பிணிகள், முதியவர்கள், குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு வரவேண்டிய நிலையில் இருப்பவர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு இதில் முன்னுரிமை தரப்படும்.
பயணத்துக்கான செலவுகள் அனைத்தும் பயணிகளையே சாரும். இவ்வாறு பதிவு செய்யப்படுபவர்களின் விவரங்கள்(பெயர், வயது, செல்ல விரும்பும் இடம், தொலைபேசி எண், முகவரி, ஆர்டி பிசிஆர் பரிசோதனை முடிவுகள்) அனைத்தும் அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதற்காக அந்தந்த மாநில அரசுகளால் நியமிக்கப்படும் அதிகாரிகளுடன், வெளியுறவுத்துறையால் நியமிக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் தொடர்பில் இருப்பர். வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்கள் பற்றிய விவரங்கள்(விமானம் வரும் தேதி, நேரம், இடம்) 2 நாட்களுக்கு முன்பே வழங்கப்பட்டு விடும்.
சொந்த நாடு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் வைக்கப்படுவார்கள். இதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்கான அனைத்து செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். அனைவரும் தங்கள் சொந்த பொறுப்பிலேயே பயணிக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் உறுதியளிக்க வேண்டும்.
பயணம் துவங்கும் போது அவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் உள்பட ஏதேனும் அறிகுறிகள் இருக்கிறதா என்று பரிசோதனைக்குட்படுவார்கள். எந்த பாதிப்பும் இல்லாதவர்களே பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
தங்கள் மாநில எல்லைகளிலும் இதேபோன்று விதிமுறைகள் பின்பற்றப்படும். அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். பயணத்தின் போது முகக்கவசம், சுகாதாரத்தை காப்பது, கைகளை சுத்தமாக வைத்திருத்தல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்.
அனைத்து பயணிகளும் தங்கள் மொபைல்களில் ஆரோக்ய சேது செயலியை தரவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனைகளின் போது ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா இருக்கிறதா, இல்லையா என்பதை அறிய நடத்தப்படும் சோதனை கட்டாயம். அதற்கு கிட்டத்தட்ட 7000 ரூபாய் செலவாகும். இதை சம்பந்தப்பட்டவர்களே செலுத்த வேண்டும்.
மற்ற பயணிகள் அனைவரும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தனிமைப்படுத்துதல் இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். அதன் பிறகும் எந்த அறிகுறியும் இல்லாத பட்சத்தில் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள். அங்கும் அவர்கள் 14 நாட்களுக்கு தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.