புதுடெல்லி:
ஊரடங்கு மற்றும் டிமானிடேசன் போன்றவைகளை அமல் படுத்திய மோடி அரசு கிழக்கிந்திய கம்பெனி போல நடந்து கொள்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஊரடங்கு மற்றும் டிமானிடேசன் ஆகியவை பாஜக அரசாங்கம் ஆளும் அடிப்படை சிந்தனையில் தோல்வியடைந்து விட்டதையே காட்டுகிறது என்றும் சிந்திக்காமல் செயல்படுவதை விட சிந்தித்து செயல்படுவது பாஜக அரசு நல்லது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வர் ஷெர்கில் கூறுகையில், “ஊரடங்கு மற்றும் டிமானிடேசன் ஆகிய இரண்டிலும், பாஜக அரசு சாமானியர்களைக் கொள்ளையடிப்பதன் மூலம் கிழக்கிந்திய கம்பெனியைப் போல நடந்து கொண்டது. சமூகத்தின் பலவீனமான பிரிவினரின் வலியைப் புறக்கணித்து, மக்களின் பாக்கெட்டை விட அரசாங்கப் பொக்கிஷங்களை நிரப்புவதில் கவனம் செலுத்தியது என்றார்.
தவறான திட்டமிடல், உணர்ச்சியற்ற அணுகுமுறை மற்றும் பகுத்தறிவற்ற முடிவெடுப்பது ஆகியவை பாஜக அரசாங்கத்தால் ஊரடங்கு மற்றும் டிமானிடேசன் ஆகியவற்றை அமல் படுத்திய போது தெளிவாக தெரிந்தது. இது சமூகத்தின் ஏழை மக்களுக்கு வலி, வேதனை மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்றும் ஜெயவீர் ஷெர்கில் கூறினார்.
மேலும் பேசிய அவர், பாஜக ஒரு தீக்கோழி போன்ற அணுகுமுறையை பின்பற்றியது, பேரழிவு விளைவுகளை முற்றிலுமாக புறக்கணித்து, இப்போது மீண்டும் சரிவடைந்துள்ள பொருளாதாரத்திற்கு ஆக்ஸிஜனை வழங்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பிபிஇ / டெஸ்ட் கிட்களை வழங்கும்போது தவறான திட்டமிடல், சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கையாள்வதில் உணர்ச்சியற்ற அணுகுமுறை மற்றும் சிறிய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பதன் மூலம் முற்றிலும் பகுத்தறிவற்ற முடிவெடுப்பது என பாஜக அரசு பல இடங்களில் தோல்வியை சந்தித்து விட்டது என்று குற்றம் சாட்டினார். எஸ்பிஐ சேமிப்புக் கணக்கில் வட்டி குறைத்தல், எரிபொருள் மீதான கலால் உயர்த்துவது மற்றும் நெருக்கடி காலத்திலும், புலம்பெயர்ந்த தொழிலாளர் ரயில் கட்டணத்தை வசூலித்தல் போன்ற கேவலமான செயல்களை செய்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் மூத்த செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி, “பொதுமக்களுக்கு எந்த திட்டமும் நிவாரண நடவடிக்கைகளும் இல்லை” என்று கூறினார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கையாள்வதில் தவறான நடவடிக்கைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை, இந்த அரசாங்கத்தின் அணுகுமுறையை தெளிவாக காட்டியுள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.