சென்னை

சென்னை அசோக் நகரில் உள்ள புதூர் 11 ஆம் தெருவில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்குதல் மிக வேகமாகப் பரவி வருகிறது.  அதில் சென்னையில் அதிக அளவில் பாதிப்பு உள்ளது.  கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதாவது சனிக்கிழமை அன்று திருவல்லிக்கேணியில் உள்ள வி ஆர் பிள்ளை தெருவில் 42 பேருக்கு கொரோனா உறுதி ஆகி இருந்தது.  தற்போது அது 52 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் இது மிக அதிகமாகும்.

தற்போது அதற்குச் சமமாக மற்றொரு செய்தி வந்துள்ளது.  அசோக் நகர் பகுதியில் உள்ள புதூர் 11 ஆம் தெருவில் மட்டும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  அசோக் நகர் சென்னை மாநகராட்சியில் 10 ஆம் மண்டலமான கோடம்பாக்கம் மண்டலத்தின் கீழ் உள்ளன.  இந்த மண்டலத்தில் இதுவரை 199 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இது நகரில் மூன்றாவது இடத்தில் உள்ளது. திருவிக நகரில் 322 பேரும் ராயபுரத்தில் 275 பேரும் பாதிக்கப்பட்டுளன்ர்.

இந்த தொற்றுக்குக் காரணமான இருவர் காய்கறி வியாபாரிகள் ஆவார்கள்.   இவர்கள் முதலில் கட்டுமான தொழிலில் இருந்து தற்போது பணி இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறி வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர்.   இவர்கள் இருவரும் காய்கறி விற்பனை நேரம் போக பாக்கி நேரத்தில் கேரம் போர்டு, தாயக்கட்டம் போன்ற விளையாட்டுக்களை தெருவாசிகளுடன் விளையாடி வந்துள்ளனர்.

இதனால் இந்த தெருவில் மேலும் பாதிப்புக்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.   இதுவரை நடந்த 50 பேருக்கான பரிசோதனையில் 22 பேருக்கு கொரோன உறுதிஆஇ உள்ளது.  முடிவுகள் வர வேண்டியது இன்னும் பாக்கி உள்ளதால்  அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.   தற்போது கொரோனா பாதிப்புக்கு அதிக அளவில் கோயம்பேடு மார்கெட் காரணமாக உள்ளதாக இந்த பகுதி வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.