திருமணம் ஆகியும் முதலிரவு கிடையாது.. தனிமைப்படுத்தப்பட்ட மணமகன்..

கொரோனா வைரஸ், ஒரு தம்பதியின் முதல் இரவையே நிறுத்திய நிகழ்வு கர்நாடக மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் எத்தனையோ திருவிளையாடல்களை நடத்திக்கொண்டிருக்கிறது.

உலக அளவில் லட்சக்கணக்கான திருமணங்களை நிறுத்தியுள்ளது.

மணமகன் ஒருபுறம் இருக்க, மணமகள் வேறுபுறம் காத்திருக்க, வீடியோ கான்பரன்ஸ் மூலம் சில திருமணங்கள் நடந்துள்ளன.

தடைகளைத் தாண்டி திருமணம் நடந்த நிலையில், ஒரு தம்பதியின்  முதலிரவை நிறுத்தி வைத்து மணமகனின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகியுள்ளது, கொரோனா.

கர்நாடக மாநிலம் போலா என்ற ஊரைச் சேர்ந்த இளைஞனுக்கு, அங்குள்ள உடுப்பி மாவட்டம் கட்டூர் என்ற இடத்தில்  சிம்பிளாக திருமணம் நடைபெற்றது.

கல்யாணம் முடிந்து மணமக்கள், போலாவில் உள்ள மணமகன் வீட்டுக்கு சென்று விட்டனர்.

அப்போது தான், மணமகன் , திருமணத்துக்கு முன்னர் மங்களூருக்கு சென்று விட்டு ஊருக்குத் திரும்பியது, சுகாதார அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது.

முதலிரவு நடக்க இருந்த நேரத்தில் அந்த கிராமத்துக்குச் சென்ற அதிகாரிகள் மணமகனிடம் விசாரித்தபோது, மங்களூரு சென்று வந்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து , விதிகளின் படி, வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொள்ளுமாறு, மணமகனை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

விதியை நொந்தபடி, வீட்டுக்குள் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார், மணமகன்.

இந்த திருமணத்தில் கலந்து கொண்ட மேலும் 26 பேரும் வீட்டில் தனிமை படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

– ஏழுமலை வெங்கடேசன்