புதுடெல்லி: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி, அடுத்த 2021ம் ஆண்டு நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக, ஒலிம்பிக் நடத்தப்படும் ஆண்டுகளில், இத்தொடர் நடத்தப்படுவதில்லை. எனவே, கடந்த 2019ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் இத்தொடர் கடைசியாக நடத்தப்பட்டது. அதில், இந்தியாவின் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, இந்தாண்டு நடக்கவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் அடுத்தாண்டு ஒத்திவைக்கப்பட்டது. எனவே, உலக பேட்மின்டன் தொடரின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், அடுத்த தொடர் பற்றிய தேதி விபரங்களை அறிவித்துள்ளது உலக பேட்மின்டன் கூட்டமைப்பு. அந்த அமைப்பினுடைய அறிவிப்பின்படி, அடுத்தாண்டு நவம்பர் 29 முதல் டிசம்பர் 5ம் தேதி வரை உலக பேட்மின்டன் தொடர் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இத்தொடர் ஸ்பெயின் நாட்டில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, இந்தியாவின் சிந்துதான் உலக சாம்பியனாக தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.