சேலம்:
பச்சை மண்டலமாக இதுவரை இருந்து வந்த கிருஷ்ணகிரிமாவட்டம் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஆரஞ்சு மண்டலமாக மாறி உள்ளது. ஆனால், அதற்கு காரணமாக கூறப்படும் நபர் ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், புட்டபர்த்தி சாய்பாபா கோவில் மூடப்பட்டு சுமார் 40 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், சம்பந்தப்பட்ட நபருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், சென்னை உள்பட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரு மாவட்டம் பச்சை மண்டலமாகவும் நேற்று மத்திய அரசு அறிவித்தது.
ஆனால், இன்று பச்சை மண்டலமான கிருஷ்ணகிரி கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆரஞ்சு மண்டலமாகி உள்ளது.
ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரி திரும்பிய நபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருடன் சென்ற 3 பேர், மற்றும் அவரரது உறவினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப் பட்டு வருகின்றனர். மேலும் இவர்கள் வசித்து வந்த தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.
இவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில், கொரோனா பாதிக்கப்பட்ட முதியவர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்றுவிட்டு, தற்போது சொந்த ஊருக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
புட்டபர்த்தி சாய்பாபா கோவில், கடந்த மார்ச் மாதம் 20ம் தேதியே கொரோனா பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டது. இந்த நிலையில், கொரோனா பாதித்த நபர் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்தவர் என்பது கூறுவது எவ்வகையில் சரியானது என்பது தெரிய வில்லை.
கொரோனா அறிகுறி 14 நாட்களில் தெரியும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்திவரும் நிலையில், கோவில் மூடப்பட்டு, 40 நாள் கழித்து தொற்று பரவி உள்ளது என்று கூறுவது எதை காட்டுகிறது.

கொரோனா பாதிக்கப்பட்ட நபர் 2 மாதங்களுக்கு முன்பு சாய்பாபா கோவிலுக்கு போய்விட்டு, மேலும் பல இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்னர்தான் கிருஷ்ணகிரி திரும்பி உள்ளார். ஆனால், புட்டபர்த்தி சென்றதாலதான் அவருக்கு தொற்று ஏற்பட்டதாக கூறுவது தவறான செயல்.
ஆந்திராவில் வேறு பல இடங்களில் அவர் தங்கிருந்த நிலையில், அந்த பகுதிகளில் எங்காவது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமே…
அல்லது, சமீபகாலமாக மருத்துவர்கள் கூறுவதுபோல பலர் எந்தவித அறிகுறியும் இல்லாமலே கொரோனாவால் பாதிக்கப்பட்டாரா?
அல்லது கொரோனா அறிகுறி தெரிய 40 நாட்கள்வரை தேவைப்படுமா?
இதை விளக்க வேண்டியது, மாநிலஅரசும், மருத்துவ நிபுணர்களும்தான்…
Patrikai.com official YouTube Channel