சென்னை:
சென்னையில் கொரோனா பாதிப்பு பயங்கரமாக பரவி வருகிறது. இதனால், ஊரடங்கு விதிமுறை களை கட்டாயமாக்க தமிழகஅரசு முனைப்பு காட்டி வருகிறது.
அதன்படி விதிமுறைகளை மீறி எந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி  வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு ஏற்கனவே அறிவித்துள்ள ரூ.100  அபராதம் உடன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 906-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை  15 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  மேலும் 673 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில்  233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் கொரோனா பரவலுக்கு மக்களின் மனநிலையே காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அரசின் விதிமுறைகளா மதிக்காமல், கூட்டம் கூட்டமாக வெளியே செல்வதும், சமூக விலகலை கடைபிடிக்காமல் ஜாலியாக அரட்டை அடிப்பதும், கடைகளில் குவிவதும் காரணமாக கூறப்படுகிறது.
ஊரடங்கை மீறுவோர் மீது காவல்துறையினர் கடுமையாக நடந்துகொண்டதால், அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர்களது கைகள் டிஜிபி திரிபாதியால் கட்டப்பட்ட நிலையில், சென்னை வாசிகள் எந்தவித பயமுமின்றி கெத்தாக ஊர் சுற்றி வருகின்றனர்.
ஊர் சுற்றுவோரை கண்டிப்புடன் தடுக்க முடியாமல் காவல்துறையினரும், சுகாதாரத்துறை ஊழியர்களும் திணறி வருகிறார்கள். இதனால் சென்னை மக்கள் சட்டத்துக்கு கட்டுப்படாமால் ஊர் சுற்றியதால் இன்று கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினர் தொடக்கத்தில் இருந்த மாதிரி கடுமையாக நடந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தால், பயம் காரணமாகவோ வெளியே சுற்றுவதை பலர் தவிர்த்திருப்பார்கள். அதுபோல கோயம்பேடு சந்தை உள்பட அனைத்து பகுதிகளில்உள்ள சந்தைகளையும் அதிரடியாக மூடியிருந்தால் இன்று இந்த அளவுக்கு கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்பு இல்லை.
தற்போது தும்பை  விட்டு விட்டு வாலை பிடிப்பது போல (தும்பு – கயிறு – மாடு பிடிக்க மூங்கணாங் கயிறு அவசியம்)  என்ற பழமொழிக்கு ஏற்ப, தற்போது சென்னையில், கொரோனா தொற்று தீவிரமான நிலையில், 5 சிறப்பு அதிகாரிகளை தமிழகஅரசு நியமித்து கொரோனா பரவலை தடுக்க  முயற்சி எடுத்து வருகிறது.
இதையடுத்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நெறிமுறைகளை தீவிரப்படுத்த தமிழகஅரசு  உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து கூறியுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர்  பிரகாஷ், சென்னையில் சமீபத்திய நாட்களில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. ஆனால் கொரோனாவின் சமூக பரவலை அறியாமல் மக்கள் தெருக்களுக்கு வருகிறார்கள்; எனவே, வரும் நாட்களில் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் .
ஊரடங்கு விதிமுறைகளை மீறி முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தாலோ, உரிய அனுமதியின்றி வாகனங்களில் சுற்றினாலோ அவர்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படு வதுடன்,   14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், விதிகளை மீறி செயல்படும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்…