டில்லி
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள ரூ.68000 கோடி வாராக்கடன்களை வசூலிப்பது குறித்து வங்கிகள் கவனம் கொள்ள வேண்டும் என ப சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் ரைட் ஆஃப் என்பது வங்கியின் வரவு செலவு கணக்கில் இருந்து குறிப்பிடக் கடன் தொகையை கணக்கியல் ரீதியாக வாராக்கடன் என அறிவிப்பதாகும். அதன்படி ரிசர்வ் வங்கிக்கு அந்தந்த வங்கிகள் அளிக்கும் சொத்துக் கணக்கில் இந்த கணக்குகள் வர வேண்டிய தொகை கணக்கில் இடம் பெறாது. ஆயினும் வங்கிக் கிளைகள் இந்த தொகையை வசூலிக்க முயற்சிகள் செய்யும்.
ரிசர்வ் வங்கி தகவல் ஆர்வலர் சாகேத கோகலேவுக்கு அளித்த பதிலில் இந்த வருடம் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி கணக்குப்படி கடன் தொகையை வெகு நாட்களாகத் திருப்பி அளிக்காத முதல் 50 நபர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் ரூ.68000 கோடி கடன்கள் ரைட் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் அளிக்கப்பட்டிருந்து. இந்த செய்கைக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார்
இதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வங்கிகளின் வழக்கமான நடவடிக்கைகள் குறித்து ராகுல் காந்திக்கு தெரியவில்லை எனவும் இதற்காக அவர் முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரத்திடம் டியூஷன் படிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதற்கு ப சிதம்பரம் தனது டிவிட்டரில் பதிலைப் பதிந்துள்ளார்.
ப சிதம்பரம் தனது டிவிட்டரில்,” ரூ.68,000 கோடி வாராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்துள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம். இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா.
இந்த மாபெரும் தவற்றைத் திருத்துவதற்கு ஒரே வழிதான் உண்டு.
ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும். மீண்டும் இந்த மூன்று நபர்களுடைய வாராக் கடன் தொகைகளை ‘வாராக் கடன்’ என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விடுக என்று உத்தரவிடவேண்டும்.” எனப் பதிந்துள்ளார்.