சிம்லா

ரடங்கு காரணமாக இமாசல பிரதேசத்தில் காய்கறிகள் தேங்கிப் போனதால் கடுமையாக விலை குறைந்துள்ளது.

இமாசலப் பிரதேச மாநிலத்தில் மலைப் பகுதி காய்கறிகளான கோஸ், காலிஃப்ளவர்,, பச்சைப் பட்டாணி, குடை மிளகாய் போன்றவை ஏராளமாக விளைகின்றன.  இங்கிருந்து வட இந்தியாவில் டில்லி, மும்பை உள்ளிட்ட  பல நகரங்களுக்கும் அனுப்பப்பட்டு வந்தன.  குறிப்பாக வட இந்தியாவில் குடை மிளகாயை சிம்லா மிர்ச்சி (சிம்லா மிளகாய்) எனவே பெரும்பாலும் குறிப்பிடுவது வழக்கமாகும்.

இமாசலப் பிரதேசத்தின் முக்கிய வருவாய் ஈட்டும் தொழில் விவசாயம் ஆகும்.  மாநிலத்தின் மொத்த வருமானத்தில் 12.75% விவசாய வருமானம் ஆகும். இந்த  மாநிலத்தின் 55.67 லட்சம் பரப்பளவில்   9.55 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்களாகும்.  இதில் 9.61 லட்சம் விவசாயிகள் பயிர் செய்கின்றனர்.

தற்போது கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மே மாதம் 3 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.  இப்போது காய்கறிகள் பருவம் என்பதால் ஊரடங்கு தொடங்கிய போது இமாசலப் பிரதேசத்தில் காய்கறிகள் விலை உயர்ந்தன.  ஆனால் ஊரடங்கு காரணமாக இங்கிருந்து காய்கறிகள் எந்த மாநிலத்துக்கும் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.  எனவே மாநிலத்தில் காய்கறிகள் மிகவும் தேங்கி விட்டன.

இதனால் காய்கறிகள் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.  விவசாயிகளுக்குக் குறைந்த பட்ச விலையும் கிடைக்காத நிலை ஏறப்பட்டுள்ளது.   பல இடங்களில் விற்பனை விலை காய்கறிகளின் அறுவடைக் கூலியை விட மிகவும் குறைவாக உள்ளதால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.  தற்போது தலைநகர் சிம்லாவில் மட்டுமே விவசாயிகளால் விற்க முடிகிறது.

இது குறித்து சுமந்தர் தாகூர் என்னும் ஒரு விவசாயி, “தற்போது பச்சைப் பட்டாணி பருவம் என்பதால் ஏப்ரல் முதல் வாரத்தில் ஒரு கிலோ ஒரு ரூபாய் வரை விற்பனை ஆனது.  ஆனால் தற்போது விலை குறைந்து 15 பைசா ஆகி உள்ளது.   இதே நிலை கோஸ் மற்றும் காலிஃப்ளவர் ஆகியவற்றுக்கும் ஏற்பட்டுள்ளது.   இதனால் அனைத்து காய்கறிகளின் விலையிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

அறுவடைக் கூலிக்குக் கூட விற்பனை விலை கட்டுப்படி ஆகாததால் பல விவசாயிகள் தங்கள் பயிர்களை அறுவடை செய்யாமல் கால்நடை தீவனமாகப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.  அதாவது காய்கறித் தோட்டங்களில் கால்நடைகளை மேய விட்டு விடுகின்றனர்.  நாட்டில் பல பெரிய நகரச் சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.