சென்னை:
தொழிலாளர் தினத்தை (மே 1–ந் தேதி)யொட்டி உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘மே’ தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளான மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ‘‘மே தின” நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உரிமைகள் மறுக்கப்பட்டு, உழைப்புக்கேற்ற ஊதியமில்லாமல், காலநேரமில்லாமல் பணி செய்து, கொத்தடிமைகளாய் அவதியுற்று இருந்த உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர், பல ஆண்டுகளாக ஒற்றுமையுடன் போராடி தங்களின் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உடல் உழைப்பை மூலதனமாக கொண்ட உழைக்கும் மக்களின் உன்னதத்தை உலகிற்கு பறைசாற்றும் தினமாகவும் மே தினம் விளங்குகின்றது.
‘‘மகத்தான செயல் எதுவும் கடின உழைப்பு இல்லாமல் சாதிக்க முடிவதில்லை” என்ற சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியை மனதில் நிறுத்தி, மக்கள் அனைவரும் தொய்வின்றி கடினமாக உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்.
‘‘உழைப்பே உயர்வு தரும், ஒளிமயமான வாழ்விற்கு வழிவகுக்கும்” என்ற நம்பிக்கையோடு, தங்களின் கடினமான உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்திடும் எனது அன்பிற்குரிய தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த ‘‘மே தின” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.