வாஷிங்டன்
கொரோனாவை கட்டுப்படுத்தாத சீனா மீது விரைவில் இழப்பீடு கோரி கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா பரவுதல் குறித்து கண்டறியப்பட்டது. அப்போது சீனா இந்த வைரஸ் மனிதருக்கு மனிதர் தொற்றாது என அறிவித்தது. அதை உலக சுகாதார மையமும் ஆமோதித்தது.
ஆனால் அது சீனா முழுவதும் பரவி தற்போது உலகெங்கும் பரவி உள்ளது. இந்த வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் அதிக அளவில் உள்ளது.
அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், “நாங்கள் சீனாவின் நடவடிக்கைகளால் அந்நாடு மீது மகிழ்ச்சியாக இல்லை. கொரோனா வைரஸ் பரவுதலைத் தொடக்கத்திலேயே நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்புகிறோம்.
வைரஸ் பரவுவதை சீனாவில் உடனடியாக நிறுத்தப்பட்டு இருந்தால் மொத்த உலகத்திற்கும் பரவுவதிலிருந்து தடுத்திருக்க முடியும். இதற்குப் பல விதங்களில் சீனாவைப் பொறுப்பாக்க முடியும். நாங்கள் இது குறித்து சில தீவிரமான விசாரணைகளைச் செய்து வருகிறோம்,
கொரோனா வைரஸால் ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குச் சீனா, 165 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று ஜெர்மனியின் செய்தித் தாள் ஒன்று தலையங்கத்தில் வலியுறுத்தியிருந்தது.
ஆனால் அதைவிட அதிக அளவில் சீனாவை நாம் பொறுப்பாக்க முடியும். கணக்குப் படி பார்த்தால் ஜெர்மனியைவிட நமக்குச் சீனா பன்மடங்கு அதிக தொகையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
நாம் இன்னும் நஷ்ட ஈடு தொகையை முடிவு செய்யவில்லை, நிச்சயமாக அது மிகப் பெரியதாக இருக்கும்.
அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் உலகளாவிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குச் சீனா விரைவில் மிக மோசமான நடவடிக்கைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.