கோவை

கோவையை சேர்ந்த சிம்ப்ளிசிடி என்னும் ஆன்லைன் இதழின் ஆசிரியருக்குக் கோவை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

கடந்த 14 ஆம் தேதி அன்று கோவையில் இருந்து வெளிவரும் சிம்ப்ளிசிடி என்னும் ஆன்லைன் இதழில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.  அதில் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு முறையான உணவு வழங்கப்படவில்லை என கூறப்பட்டிருந்து.  இதையொட்டி மருத்துவக் கல்லூரி தலைவர் அசோகன் இடமாற்றம் செய்யப்பட்டர்.

அடுத்தாக அதே இதழில் 17 ஆம் தேதி அன்று பொதுமக்களுக்கு அளிக்கும் நிவாரண தொகையில் ரேஷன்க்டை ஊழியர்கள்  முறைகேடு செய்வதாக செய்தி வெளியானது.  அது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.    இதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி பணியாளர் நிர்வாக உதவி ஆணையர் சுந்தரராஜன் என்பவ்ர் சிம்ப்ளிசிடி இதழ் மீது காவல்துறையில் புகார் அளித்தார்

அந்த புகாரில் சிம்ப்ளிசிடி செய்தி நிறுவனம் நோய்த்தொற்று பரவிவரும் இந்த காலகட்டத்தில் பொய்யான தகவல்களை வெளியிட்டு அரசு ஊழியர்களைப் போராடத் தூண்டுவதாகவும், இந்த செய்திகளினால் அரசு நிர்வாகம் இயங்குவதில் இடர்பாடுகள் ஏற்படும் எனவும் குறிப்பிட்டிருந்தது. மேலும்  சிம்ப்ளிசிடி இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியரான ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கோரப்பட்டிருந்து.

இந்த புகாரின் அடிப்படையில் கடந்த வியாழன் அன்று அந்நிறுவனத்தின் ஆசிரியர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியன் கைது செய்யப்பட்டிருந்தார்.   அவர் கைதுக்குப் பல எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.   அவர் ஜாமீனுக்கு மனு செய்திருந்தார். இன்று விடியோ கான்பிரன்சிங்கில் மனுவை விசாரித்த முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவருக்கு ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்னும் உத்தரவுடன் ஜாமின் வழங்கியது.