சென்னை: சென்னையின் பிரபலமான கோயம்பேடு சந்தையில் 600 மொத்த விற்பனை கடைகள் செயல்பட மட்டுமே சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு சிறு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், அத்யாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கோயம்பேடு சந்தையும் வழக்கம்போல இயக்கி வருகின்றன. ஆனால், இங்குள்ள வியாபாரிகளும், அங்கு வரும் சிறுவியாபாரிகள், பொதுமக்கள் யாரும் சமூகவிலகலை கடைபிடிக்காமல் இருந்து வந்தனர். இதுகுறித்த பல முறை அறிவுறுத்தியும், ஏனோதானோ என செயல்பட்டதால் பலருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வமாக 3 பேருக்கு மட்டுமே கொரோ தொற்று உறுதியாகி இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தாலும், மேலும் 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் முடிவெடுபவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவரிடம் முடிவெட்டிய 32 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பலருக்கு கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டை இடம் மாற்றுவது குறித்து மாநகராட்சி ஆணையர் உள்பட உயர் அதிகாரிகள் நேற்று வணிகர்களுடன் ஆலோசனை நடத்தினார். இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இன்றைய ஆலோசனை கூட்டத்தில், கோயம்பேடு சந்தையை மாதவரம், கேளம்பாக்கம் போன்ற பகுதிகளில் பிரித்து அமைப்பது குறித்து கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க பிரநிதிகளுடன் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர் விவாதித்தனர்.
கோயம்பேடு மார்க்கெட்டை புறநகர் பகுதிக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் சங்கத்தினர், கோயம்பேடு சந்தையை அரசு பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
அதை ஏற்காத சிஎம்டிஏ அதிகாரி கார்த்திகேயன் கோயம்பேடு சந்தையை புறநகரில் பிரித்து அமைப்பதற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என தெரிவித்தார் தொடக்கத்தில் இதை ஏற்றுக்கொள்ள மறுத்த வியாபாரிகள், அரசின் உறுதியான நடவடிக்கை காரணமாக, அரசின் நிபந்தனைகள் மட்டும் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர்.
அதன்படி, கோயம்பேடு சந்தையில் உள்ள 1900 மொத்த விற்பனை கடைகளில் 600 கடைகள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி வழங்கி உள்ளது. கோயம்பேட்டில் உள்ள 1500 சில்லறை விற்பனை கடைகளும் அடைக்கப்படும் என அறிவிப்பு.
மேலும் சில்லறை விற்பனைக்கடைகள் 450 பேர் அமைந்தகரையில் தற்காலிகமாக விற்பனை கடைகளை அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, கோயம்பேட்டில் உள்ள 850 பழக்கடைகள் மே 1 முதல் மூடப்படும் என்று 2வது கட்ட பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் முடிவை மொத்த வியாபாரிகள் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.