கோவை
ஒரு ரூபாய் இட்லி பாட்டி என அழைக்கப்படும் கமலாத்தாள் பாட்டிக்கு விலை ஏற்றம் காரணமாக பலரும் உதவி செய்துள்ளனர்.
கோவை நகரின் புறநகர்ப்பகுதியான வடிவேலம்பாளையம் என்னும் ஊரில் வசித்து வரும் கமலாத்தாள் என்னும் 80 வயது மூதாட்டியை அன்பாக அனைவரும் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என அழைக்கின்றனர். அவர் அந்த பகுதியில் உள்ள ஏழைத் தொழிலாளர்களின் பசியைப் போக்கக் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என விற்பனை செய்து வருகிறார்.
தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் பல பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளன. குறிப்பாக உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் போன்ற பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கமலாத்தாள் பாட்டி குறைந்த லாபத்தை எதிர்பார்த்து விற்பனை செய்த போதிலும் இந்த விலை ஏற்றம் அவருக்கு நஷ்டத்தை அளித்துள்ளது.
ஆயினும் தன்னை நம்பி உள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு விலை ஏற்றத்தை அளிக்க விரும்பாத ஒரு ரூபாய் இட்லி பாட்டி தினசரி தான் செய்யும் 600 இட்லிக்குப் பதில் 400 இட்லி செய்து வருகிறார். அவருடைய இந்த நடவடிக்கையால் அவருக்குப் பல ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் இருந்து உதவிகள் கிடைக்கத் தொடங்கி உள்ளது.
நேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் திமுக அளிக்கும் மளிகைப் பொருட்கள் வந்து சேர்ந்ததா என பாட்டியிடம் தொலைப்பேசி மூலம் கேட்டுள்ளார். அதைத் தொடர்ந்து பாஜக உறுப்பினர்கள் அவரைச் சந்தித்து அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை நன்கொடையாக அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அதிமுகவினரும் நிவாரணப் பொருட்கள் அளித்து உதவி உள்ளனர்.
கமலாத்தாளின் தற்போதைய நிலையை கேள்விப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பி காளிராஜ் இவருக்கு உணவு மற்றும் மளிகைப் பொருட்களை அன்பளிப்பாக அளித்துள்ளார். இதன் மூலம் மேலும் பல ஏழைகளுக்குக் குறைந்த விலையில் உணவளிக்க முடியும் என கமலாத்தாள் பாட்டி நன்றி தெரிவித்துள்ளார்.