மும்பை
சச்சின் டெண்டுல்கர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அவுட்டானதற்காக டாய்லெட்டில் அழுத நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தன் 47 ஆவது பிறந்தநாளில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைனுடன் நேரலையில் உரையாடினார்.
1989 இல் சச்சின் தனது 16 வயதில் இந்திய பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக பங்கேற்றார்.
“எனது முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் இருவரும் தாறுமாறாக பந்து வீசினார்கள். சில பந்துகள் என் உடம்பிலும் பட்டன.
முதல் இன்னிங்சில் 15 பந்துகளில் அவுட்டானதால் மனம் நொறுங்கியது. பெவிலியன் திரும்பியதும் கழிவறை சென்று அழுது கொண்டே இருந்தேன். இதுதான் நான் இந்தியாவிற்காக ஆடும் கடைசி ஆட்டம் எனவும் நினைத்தேன்” என சச்சின் தனது முதல் டெஸ்ட் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
மேலும் தான் துயரத்தில் இருந்த அந்த நாளில் ரவிசாஸ்திரி தனக்கு மிகவும் ஆறுதலும், நம்பிக்கையும் ஊட்டியதாக சச்சின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
“இதை உன் கடைசி ஆட்டம் என நினைக்காதே. அவர்கள் இருவரும் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்களின் பந்துவீச்சை புரிந்துகொள்ள அதிகநேரம் பிட்சில் செலவிடு. எல்லாம் எளிதாகும் என நம்பிக்கை வார்த்தைகளைக் கூறினார்.
ரவிசாஸ்திரியின் அறிவுரைப்படி விளையாடியதால் அடுத்த இன்னிங்சில் 59 ரன்கள் எடுத்தேன்”என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கிரிக்கெட்டின் வரலாற்றில் நெடிய சாதனைகளுக்கு சொந்தக்காரர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அழுத நிகழ்வு ரசிகர்களை உருக வைத்துள்ளது.