டில்லி
கொரோனாவை குணப்படுத்த நடத்திய பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்துள்ளதால் அது ஊக்கம் அளிப்பதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
பிளாஸ்மா சிகிச்சை என்பது நோயால் தாக்கப்பட்டோரின் ரத்தத்தில் உள்ள எதிர்மறை அணுக்களை பாதிக்கப்பட்டோருக்குச் செலுத்துவது ஆகும் பொதுவாக எந்த நோயில் தாக்கப்பட்டு குணம் அடைந்தாலும் அந்த நபரின் ரத்தத்தில் பிளாஸ்மா என்னும் நோய்க்கு எதிரான அணுக்கள் உருவாகி இருக்கும். அந்த அணுக்களால் நோயாளி தனது நோயின் தாக்கத்தில் இருந்து விடுபட்டுகிறார்.
எனவே அதே எதிர்மறை அணுக்களைப் பாதிக்கப்பட்ட அதே நோயால் பாதிக்கப்பட்ட மற்றொருவருக்குச் செலுத்தும் போது அவரிடம் குறைந்த அளவில் உள்ள எதிர்மறை அணுக்கள் அதிகரிக்கப்பட்டு அவர் குணமடைவது எளிதாக இருக்கும் என்பதே இந்த சிகிச்சையின் அடிப்படையாகும். இந்த சிகிச்சை தற்போது கொரோனா நோயாளிகளிடம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ”டில்லியில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண மருத்துவமனையில் நான்கு கொரோனா நோயாளிகளுக்குச் சோதனை அடிப்படையில் பிளாஸ்மா சிகிச்சை நடத்தப்பட்டது. நால்வரின் உடல்நிலையும் நல்ல முன்னேற்றத்துடன் உள்ளது. நால்வரில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருந்து மீண்டு, இருவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். இது எங்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.
எனவே மேலும் சில கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்ய உத்தேசித்துள்ளோம். அந்த சிகிச்சையின் முடிவைப் பொறுத்து அதிக அளவில் மத்திய அரசின் அனுமதியைக் கோரி அனுமதி கிடைத்ததும் சிகிச்சை வழங்கப்படும். இதற்கு நோயில் இருந்து மீண்டோர் பிளாஸ்மாவை தானமாக வழங்க முன் வர வேண்டும். அதுதான் அவர்களுடைய உண்மையான நாட்டுப்பற்றுடன் கூடிய நடவடிக்கையாக அமையும்” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.