லண்டன்
கொரோனா தாக்குதலுக்குப் பிறகு மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறித்து ஒரு மாபெரும் ஆய்வு நடத்தப் பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலால் அதிக அளவில் பாதிப்பு அடைந்த நாடுகளில் பிரிட்டனும் ஒன்றாகும். இங்கு சுமார் 1.33 லட்சத்துக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்ரக்லில் 18100 பேர் மரணம் அடைந்த்ள்ளன்ர். உலக அளவில் பாதிப்படைந்தோரில் ஆறாம் இடத்திலும் மரணம் அடைந்தோர் எண்ணிக்கையில் ஐந்தாம் இடத்திலும் பிரிட்டன் உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் பிரிட்டன் மக்களிடையே நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. இதையொட்டி மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறித்து அரசு ஆய்வு ஒன்றை நடத்த உள்ளது. இந்த ஆய்வு சுகாதாரத்துறை மற்றும் தேசிய கணக்கெடுப்பு அலுவலகம் இணைந்து நடத்த உள்ளது. சுமார் ஒரு வருடங்களுக்கு மேல் நடத்த உள்ள இந்த ஆய்வு 3 லட்சம் மக்களிடம் நடைபெற உள்ளது.
இந்த ஆய்வில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்ட மக்களிடம் இருந்து மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெற உள்ளது. அத்துடன் ஒரு சில கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளிக்க வேண்டி இருக்கும். பரிசோதனையின் மூலம் இவர்களுக்கு தற்போது பாதிப்பு உள்ளதா என்பது தெரிய வரும். அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் மேலும் பரிசோதனைகள் நடைபெறும்.
இவ்வாறு 5 வாரங்களுக்குப் பரிசோதனை தொடரும். அதன் பிறகு மாதம் ஒன்றாக 12 மாதங்களுக்குப் பரிசோதனைகள் நடைபெறும். இதில் முதல் கட்டமாக இங்கிலாந்தில் 25000 பேருடன் ஆய்வு தொடங்குகிறது விரைவில் இந்த ஆய்வு பிரிட்டன் முழுவதும் சுமார் 3 லட்சம் பேருக்கு நடத்தப்பட உள்ளது.