கோவை:

கோவையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை சிங்கா நல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புடன் 127 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள எஸ். குமாரபாளையத்தை சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கொரோனா அறிகுறியுடன் இ.எஸ்.ஐ மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் 30 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 18 ஆண்கள், 8 பெண்கள் 2 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள்.

இதற்கிடையே இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கோவையை சேர்ந்த 10 பேர், திருப்பூரை சேர்ந்த 9 பேர், நீலகிரியை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 23 பேர் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

கோவை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 31 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கோவை, திருப்பூர், நீலகிரி என இதுவரை மொத்தம் 51 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் உள்பட 97 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்திலையில், கொரோனா பாதித்த பெண்ணிற்கு பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட குழந்தைக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.