வேலுர்:

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருவதால், வேலூர் அருகே உள்ள வாணியம்பாடி முழுமையாக சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த நகரம் முழுவதும்  முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக  வாணியம்பாடி நகராட்சி அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று சில பகுதிகளில் தீவிரமாக பரவி வருகிறது. டெல்லி இமாம் தப்லிகி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் உள்ள பகுதிகளான சென்னை ராயபுரம், திருநெல்வேலி மேலப்பாளையம் உள்பட  இஸ்லாமியர்கள் வசிக்கும் பல பகுதிகளில் கொரோனா தொற்று அறிகுறி காரணமாக சீல்வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியான வாணியம்பாடியில் பலருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்  வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த 8 பேருக்கு  கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அந்த நகர் முழுவதும்   கட்டுப்படுத்துவது குறித்து, மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும், வணிகர்கள், விவசாயிகள், சுகாதாரத் துறையினர், தன்னார்வலர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  வாணியம்பாடி முழுமையாக தடை செய்யப்பட்ட பகுதியாக ஆட்சியரால் அறிவிக்கப்பட்டது. இன்று முதல் மளிகை கடைகள், காய்கறி சந்தைகள், இறைச்சி கடைகள், மருந்தகங்கள் ஆகியவை இயங்காது என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் வங்கிகள், ஏடிஎம் மையங்கள், மருந்தகங்கள் காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி வரை இயங்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதிகள் 100 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.  வாணியம்பாடி நகரத்தில் உள்ள அனைத்து வார்டு வழித்தடங்களும் மூடப்பட்டு சீல் வைக்கப்படும்.
அத்தியாவசியப் பொருட்கள் தேவைக்கு – 82700 07135, குடிநீர் & சுகாதார தேவைக்கு – 82700 07148, காவல்துறை உதவிக்கு – 82700 07149 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.