’மாஸ்க்’ அணியாத முதல்வர்.. சந்தித்த எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா…
’’அழுக்கைப் போக்கக் கங்கையில் நீராடலாம். அந்த கங்கையே அழுக்காக இருந்தால் எங்கே போவது?
நம் நாட்டில் உலா வந்து கொண்டிருக்கும் பழமொழி இது.
இந்த பழமொழியை நினைவு கூறும் வகையில் குஜராத் மாநிலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த மாநில பா.ஜ.க. முதல்வரான விஜய் ரூபானி தலைநகர் காந்திநகரில் நேற்று சில எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார்.
அவர்களில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இம்ரானும் ஒருவர்.
30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இதன் பின் துணை முதல்-அமைச்சர் நிதின் படேல் உள்ளிட்ட சில அமைச்சர்களையும் இம்ரான் சந்தித்துள்ளார்.
கொஞ்ச நேரத்தில், எம்.எல்.ஏ. இம்ரானுக்கு கொரோனா தொற்று இருப்பதாக –
அவர் மேற்கொண்ட பரிசோதனையில் தெரிய வந்தது.
எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா என்பதைக் காட்டிலும், அவர் முதல்வரைச் சந்தித்த போது வெளியான புகைப்படங்கள் தான், குஜராத்தில் பேசு பொருள் ஆகியுள்ளது.
ஊரை எல்லாம் முகக்கவசம் அணியுமாறு ‘அட்வைஸ்’ செய்யும், முதல் –அமைச்சர் விஜய் ரூபானி, இந்த சந்திப்பின் போது, ‘மாஸ்க்’ அணிந்திருக்க வில்லை.
பேருக்கு ‘மாஸ்க்’ அணிந்துள்ளார், இம்ரான். அந்த ‘மாஸ்க்’ அவரது வாய்க்குக் கீழே ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறது.
எம்.எ.ல்.ஏ.வுக்கு கொரோனா என்ற செய்தி அறிந்து, அவரை சந்தித்த வி.ஐ.பி.க்கள் , பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
– ஏழுமலை வெங்கடேசன்