ராணிப்பேட்டை
கொரோனா தொற்றுக்காக 19 நாள்கள் சிகிச்சை பெற்று குணமடைந்த அஹமதுல்லா, அந்நோயை வெல்ல தன்னம்பிக்கையே மிகச் சிறந்த டானிக் எனக் கூறினார்.
பணி நிமித்தமாக துபாய் சென்று திரும்பிய அவர் மார்ச் 15 ஆம் தேதி காய்ச்சல் அறிகுறிகளோடு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.இரண்டு நாட்களுக்குப் பிறகு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு அங்கேயே தனிமை வார்டில் சிகிச்சை பெறத் தொடங்கினார்.
இது குறித்து அஹமதுல்லா, முதல் இரண்டு நாள் வரை தீவிர மன உளைச்சலுக்கு ஆளானேன். பிறகு எனக்கு நானே உறுதியாக கூறிக் கொண்டேன், நிச்சயம் இதிலிருந்து மீள்வேன். எனது குடும்பத்துடன் மீண்டும் மகிழ்ச்சியாக வாழ்வேன் என்று திடமாக நம்பினேன்.
தனிமை வார்டில் என்னிடம் போன் மட்டுமே இருந்தது. என் நண்பர்கள் நம்பிக்கையோடு அடிக்கடி பேசினார்கள். பழைய நல்ல நினைவுகளை போனில் பகிர்ந்தார்கள். வீட்டிற்கு என் வலிகள் தெரியக்கூடாது என்பதற்காக ஐந்து நாட்களுக்கு ஒரு முறை வீடியோ காலில் பேசினேன்.
அதுமட்டுமல்லாது தினமும் ஐந்து முறை கடவுளை தொழுதேன்.இது எனக்குள் நேர்மறை எண்ணங்களை நெருங்கியது.
என்ன நடந்தாலும் கொரோனாவை வெல்வேன் எனும் நம்பிக்கை மட்டும் என்னுள் நிறைந்திருந்தது.
19 ஆம் நாள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியது மறக்கவே முடியாத நொடிகள். கொரோனாவை எதிர்கொண்ட நாட்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் சேவைக்கு என் வாழ்நாள் முழுதும் நன்றி கூறுவேன்.
என் நண்பர்களின் அன்பும் மறக்கவே முடியாதது. கொரோனாவை எதிர்க்க உங்களின் தன்னம்பிக்கையே மிகச் சிறந்த டானிக்” எனக் கூறினார்.
வாழ்வின் எந்தவொரு வலியையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டார் நிச்சயம் மீண்டு வரலாம். கொரோனாவிற்கும் இது பொருந்தும் என்பதை அஹமதுல்லா நிறுவியுள்ளார்.
(நன்றி – பிபிசி தமிழ்)