பம்பா:
சித்திரை மாதப்பிறப்பு மற்றும் விஷூ கனி பூஜைக்காக சபரிமலை அய்யப்பன்கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. ஆனால், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து மத வழிப்பாட்டு ஸ்தலங்களும் நாடு முழுவதும் மூடப்பட்டு உள்ளன. முக்கியக்கோவில்களில், பக்தர்கள் அனுமதியின்றி, பூசாரிகள் மூலம் பூஜைகள் நடைத்தப்பட்டு வருகின்றன.
அதுபோல சபரிமலை அய்யப்பன் கோவிலிலும், மாதாந்திர பூஜைக்காக நடைகள் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த மாதம் பங்குனி ஆராட்டு திருவிழா ரத்து செய்யப்பட்டது. அதுபோல, தற்போது சித்திரை மாத பூஜை மற்றும் விஷுகனிப் பூசைகளையும் பக்தர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாளை சித்திரை மாதம் பிறப்பதை முன்னிட்டு இன்று மாலை 5:00 மணிக்கு அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. கோவில் மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடை திறக்கிறார் .தொடர்ந்து விசேஷ பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
பின்னர் நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் விஷூகனி பூஜை, அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெறும். ஏப்.18 வரை தினமும் உஷபூஜை, உச்சபூஜை, அத்தாழபூஜை மட்டுமே நடைபெறும், நெய்யபிஷேகம், அஷ்டாபிஷேகம், களபாபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படிபூஜை, சகஸ்ரகலசம், புஷ்பாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது என்று தேவஸம்போர்டு அறிவித்து உள்ளது.
காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 10 மணிக்கு அடைக்கப்படும் என்றும், மாலை 5:00 மணிக்கு திறக்கும் நடை இரவு 7:30 மணிக்கும் அடைக்கப்படும், குறைந்த அளவு ஊழியர்கள் மட்டுமே இந்த பணிகளை மேற்கொள்வார்கள் என்று ம், இறுதியாக ஏப்ரல் 18ந்தேதி இரவு 7:30 மணிக்கு பூஜைகள் நிறைவு பெற்று நடை அடைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.