விஜயவாடா: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆந்திரா முழுவதும் மொத்தம் 16 கோடிக்கும் அதிகமான முகக் கவசங்களை விநியோகிக்க அம்மாநில அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், “கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க முகக்கவசம் உதவும். எனவே ஒவ்வொருவருக்கும் தலா 3 முகக்கவசங்கள் வழங்கப்படவுள்ளன.
தற்போது ஆந்திர மாநில மக்கள் தொகை 5.3 கோடியாக உள்ளது. இதற்காக 16 கோடி முகக்கவசங்கள் தேவைப்படுமென கணக்கிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் இல்லத்தில் நடந்த உயர்மட்ட ஆய்வு கூட்டத்தில், விரைந்து முகக்கவசங்களை மக்களுக்கு வினியோகம் செய்யுமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் முதல்வர்.
இந்தக் கூட்டத்திற்கு பின்னர் பேசிய சுகாதாரத்துறை சிறப்பு தலைமை செயலர் கே.எஸ். ஜவஹர் ரெட்டி, “ஆந்திரா முழுவதுமான கணக்கெடுப்பு வீடுவீடாக மூன்றாவது சுற்றாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தமுள்ள 1.47 கோடி வீடுகளில், தற்போது 1.43 கோடி வீடுகளில் கணக்கெடுப்பு முடிந்துள்ளது. அதனடிப்படையில், 9,107 பேர்கள் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.