புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் அடங்கிய பிறகு, போர்க்கால அடிப்படையில் சாலை புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணிகளை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் தொடங்க மாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்தார் மத்திய நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கொரோனா அச்சத்தால் பல தொழிலாளர்கள் புலம் பெயர்ந்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர் மற்றும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
அவர்களை மீண்டும் பணியமர்த்த மாநில அரசிடம் பேசி வருகிறோம். நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் சாலை மேம்பாட்டு பணிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன. இதற்காக ஏற்கெனவே ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சாலை சீரமைப்பு பணிகளுக்காக புதிய முறையில் நிலம் கையகப்படுத்துவதில் அரசு ரூ.16,000 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது. அதிவேக எக்ஸ்பிரஸ் சாலைகளில் பொருளாதார வளா்ச்சியை அதிகரிக்கவும், தொழிலகப் பாதைகளை அமைக்கவும் தொழில் முதலீட்டாளா்கள் முன்வர வேண்டும்.
இதற்கு நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநில அரசின் அனுமதியையும் பெற வேண்டும். அனுமதி கிடைத்ததும் சாலை பணிகள் துவங்கப்படும். மேலும் இந்த நிதியாண்டில் அதிக அளவிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றார் அமைச்சர்.