புது டெல்லி:
பி.எம்-கேர்ஸ் நிதி அமைக்கப்பட்டதை எதிர்த்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு குடிமக்கள் பணத்தை நன்கொடையாக வழங்கக்கூடிய பி.எம்.கேர்ஸ் நிதியை அமைப்பதற்கான மத்திய அரசின் முடிவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரிய பிரதமர் மோடி, தங்களால் இயன்ற பண உதவிகளை செய்ய வேண்டுகோள் விடுத்ததுடன், இதற்காக தனி நிதியம் ஒன்றை கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி உருவாக்கியுள்ளார். பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகள் நிவாரணம் ( Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund -PM Cares Fund) என்கிற இந்த நிதியத்தின் பெயரில் நிதி பெறுவதற்கான வங்கிக் கணக்கும் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு நிதியளிப்பவர்களுக்கு வருமான விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா போன்ற நெருக்கடி காலங்கள் மட்டுமல்லாமல் பேரிடர் காலங்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடும் PM Cares ட்ரஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் தலைவராக பிரதமர் இருப்பார். பாதுகாப்பு துறை, உள்துறை, நிதித்துறை அமைச்சர்கள் இதன் உறுப்பினர்களாக இருப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PM Cares நிதியம் உருவாக்கப்பட்டதை தொடர்ந்து, ஏற்கனவே பிரதமர் தேசிய நிவாரண நிதி இருக்கும் போது புதிய நிதியம் எதற்காக தற்போது தேவை. எந்த சட்டத்தின் கீழ் இந்த நிதியம் பதிவு செய்யப்பட்டது. பொது சமூகம், எதிர்க்கட்சியை சேர்ந்த எந்த உறுப்பினர்களையும் ஏன் இந்த ட்ரஸ்ட் கொண்டிருக்கவில்லை என்ற கேள்விகள் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு நிதியளிப்போர் வருமான வரியில் இருந்து விலக்கு பெற வேண்டுமென்றால் அதற்கு முறையாகப் பதிவு செய்யப்பட்டு, ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவெல்லாம் எப்போது நடைபெற்றது எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
பிரதமர் தேசிய நிவாரண நிதி, PM Cares Fund ஆகிய இரண்டு நிதியங்களுக்கும் எந்த விதமான வேறுபாடுகளும் பெரிதாக இல்லாத நிலையில், காங்கிரஸ் கட்சியை கழட்டி விடும் நோக்கிலே இந்த புதிய நிதியம் உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது