சேலம் :

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19 நாட்களாக ஊரடங்கு உத்தரவு நீடித்துவரும் நிலையில், இந்த ஊரடங்கு மேலும் எத்தனை நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்பது பிரதமரின் கையில் தான் உள்ளது என்று தமிழக அரசு கைவிரித்திருக்கிறது, சுமார் 50000-க்கும் அதிகமான கட்டுமான பணிகள் தமிழகத்தில் மட்டும் ஸ்தம்பித்து நிற்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சேலத்தை சேர்ந்த கட்டுமான பொறியாளர்கள் தரும் புள்ளிவிவரம், ஊரடங்கு உத்தரவு இந்த துறையை நம்பி வாழும் ஐந்து லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளது, இது தவிர ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொறியாளர்கள் மற்றும் கட்டிடக்கலை வல்லுனர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

விவசாயம் பொய்த்த நிலையில், கிராமங்களை விட்டு நகரங்களில் கட்டிட கூலிகளாக மாறிய ஏழை தொழிலாளர்கள் பெரிதாக சேமிப்பும் இல்லாத நிலையில் உலகமே முடங்கிப்போய் மீதி இருக்கும் நாட்களை எப்படி சமாளிப்பது என்று செய்வதறியாமல் தவித்துவருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று இவர்களை அச்சுறுத்தி வீடுகளை விட்டு வெளியில் வராமல் முடக்கியிருந்தாலும், சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் தாங்கள் வேலை செய்யும் கட்டிடங்களிலேயே தங்கி இருப்பவர்கள் அவர்களின் வயிறு பசிக்காக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியை நாட வேண்டிய நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்ற தகவலும், கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இருந்து பொருட்கள் வர தாமதமாகும் என்ற நிலையும், இவர்களை மிகுந்த வேதனைக் குள்ளாக்கியிருக்கிறது.

ஏற்கனவே, தமிழக நலனில் மத்திய அரசின் அக்கறை என்ன என்பது கொரோனா நிவாரண நிதி ஒதுக்கியதில் தெரிந்த நிலையில், வாழ்வாதாரம் இழந்த மக்களின் கோரிக்கையையாவது மத்திய அரசை காரணம் காட்டாமல், தாயுள்ளம் கொண்டு உடனடியாக நிறைவேற்றி தருமா தமிழக அரசு என்று பரிதவித்துவருகின்றனர்.