டோக்கியோ
சீனாவில் உள்ள தொழிலகங்களை தங்கள் நாட்டுக்கு மாற்ற ஜப்பான் உதவித் தொகை வழங்க உள்ளது.
ஜப்பான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் மிகப் பெரிய வர்த்தக கூட்டு நாடுகளாக உள்ளன. ஜப்பானின் பல உற்பத்தி தொழிலகங்கள் சீனாவில் இயங்கி வருகின்றன. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அது சீனா எங்கும் பரவியதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தற்போது கொரோனா தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.
சீனாவில் முழு ஊரடங்கு காரணமாக எந்த தொழிலகமும் இயங்கவில்லை. இதனால் ஜப்பான் நாட்டுத் தொழிலக உற்பத்தி முழுவதுமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே இதனால் பாதிப்படைந்துள்ள ஜப்பான் தனது சீனாவுடனான வர்த்தக உரவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளதாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
சீனாவில் உள்ள தங்கள் தொழிலகங்களை ஜப்பானுக்கு மாற்ற ஊக்கத்தொகை அளிக்கப் போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது அந்த அறிவிப்பின்படி இந்த தொழிலகங்களைச் சீனாவில் இருந்து ஜப்பானில் மாற்றுவோருக்கு 2 பில்லியன் டாலர் உதவித் தொகையும் சீனாவில் இருந்து ஜப்பான் அல்லாத நாடுகளுக்கு மாற்றுவோருக்கு 200 மில்லியன் டாலரும் உதவித் தொஐ வழங்க உள்ளது.
இது குறித்து ஜப்பானிய ஆராய்ச்சி நிறுவன பொருளாதார வல்லுநர் ஷினிசி செகி, “ஏற்கனவே ஜப்பானிய நிறுவனங்கள் சீனாவை உற்பத்தி தளமாகச் செயல்படுவதைக் குறைத்துள்ளது. இந்த ஊக்கத் தொகை காரணமாக வரும் நாட்களில் இது மேலும் பெரிய மாற்றத்தை உருவாக்கும். சீனாவில் விற்பனை செய்யப்பட உள்ள வாகனங்களின் உற்பத்தி மட்டும் சீனாவிலேயே நடக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சீனாவில் ஊரடங்கு அறிவித்த போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சீனாவில் உள்ள பல ஜப்பான் தொழிலகங்கள் தங்கள் உற்பத்தியைச் சீனாவை விட்டு அகற்ற வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்துள்ளன. தற்போது அந்த விருப்பம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இது சீனாவுக்கு ஜப்பான் அளித்துள்ள பேரிடி என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.