ரோம்: கொரோனா வைரஸ் தொற்றால், அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் தற்போது வைரஸ் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை, 15,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள இத்தாலியில், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது முதன்முறையாக குறைந்துள்ளது. மேலும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த எட்டு நாட்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
இதேபோல், கொரோனாவினால் அதிக பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கும் ஸ்பெயினிலும் கொரோனா வைரஸின் தாக்கம் சற்றுக் குறையத் துவங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால், புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் இத்தாலி, ஸ்பெயினில் குறைந்துள்ளது. இதனால், இந்த இரு நாடுகளும் விரைவில் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் கொரேனா வைரஸ் தாக்கி, அந்நாட்டு இளவரசி ஒருவரே பலியானது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அமெரிக்காவில் புதிதாக பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.