இஸ்லாமாபாத்: நாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம் என்ற மெத்தனத்தில் யாரும் கொரோனா வைரஸை அலட்சியப்படுத்திவிடக்கூடாது என்று எச்சரித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.

பெரும் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் நியூயார்க்கில் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடியுள்ளதையும் அவர் உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாகிஸ்தானில் இதுவரை 2,800க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றியவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அரசு சார்பில் 1000 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டது.

அதனைப் பார்வையிட்ட இம்ரான்கான் கூறியதாவது, “கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருக்கிறோம் என யாரும் அலட்சியம் காட்டுதல் கூடாது. வைரஸ் தொற்று அச்சுறுத்தலில் இருந்து நாம் விடுபடவில்லை. அதிகமான பணக்காரர்கள் வசிக்கும் நியூயார்க் நகரை பாருங்கள்.

தொற்றுநோய் எப்போது முடிவடையும், எவ்வளவு சேதம் விளைவிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. தொற்றுநோயால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. கொரோனா சவாலில் இருந்து பாகிஸ்தான் வலுவாக வெளிவரும்” என்றார் பாகிஸ்தான் பிரதமர்.