மின்ஸ்க்: கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல ஐரோப்பிய நாடுகள் ஊரடங்கு, அபராதம் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸின் நிலைமை வேறுமாதிரியாக இருந்து வருகிறது.
அந்நாட்டிலும் வைரஸ் தாக்கம் இருந்தாலும், பெலாரஸ் மக்கள் வழக்கம்போல் எந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் உற்சாகமாக இருந்து வருகின்றனர். அந்நாட்டில் எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
இந்நிலையில் பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாசெங்கோ அந்நாட்டின் தலைநகர் மின்ஸக்கில் நடந்த ஹாக்கிப் போட்டி ஒன்றை பார்வையிட்டார். பார்வையாளர்கள் மத்தியில் பேசிய அதிபர், “இங்கு வைரஸ் தொற்று எதுவும் இல்லை. விளையாட்டுதான் வைரஸிற்கு எதிரான மருந்து. ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம்தான் பாதிக்கப்படும்” என்றார்.
பெலாரஸ் நாட்டில் இதுவரை 152 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார். ஆனால் மற்ற நாடுகளைப்போல் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் பின்பற்றப்பட வில்லை.
இந்நிலையில் கால்பந்தாட்ட போட்டியும் நடைபெறுகிறது. தலைநகர் மின்ஸ்கில் பெரும்பாலும் யாரும் முகக்கவசம் அணியவில்லை. ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.