சென்னை: கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலத்தவர்கள் உட்பட தொழிலாளர்களிடம் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: ஊரடங்கு காரணமாக அந்தந்த பகுதிகளில் இருக்கும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட ஏழை மக்கள் தற்காலிகமாக தங்கவும், அவர்களுக்கு தேவையான உணவுக்கும் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
தங்களுடைய மாநிலங்களுக்கும், ஊர்களுக்கும் திரும்பிய வெளிமாநில தொழிலாளர்களை, அந்தந்த பகுதி மாவட்ட ஆட்சியர்கள்/ஆணையர்கள் சுகாதார நடைமுறைப்படி அவர்களை 14 நாள் கண்காணிப்பில் வைத்து அருகில் உள்ள தங்குமிடத்தில் தங்கவைக்க வேண்டும்.
அவர்கள் பணியாற்றிய நிறுவனங்களோ, கடைகளோ அல்லது வணிக நிறுவனமோ எவ்வித பிடித்தமும் இன்றி உரிய தேதியில் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்க வேண்டும்.
வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட எந்தவொரு தொழிலாளர்களிடமும் வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது. தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் வீடுகளை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.