மும்பை: இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் நட்சத்திரமாக இருக்கும் மகேந்திரசிங் தோனி, தன் கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் ஆசைப்பட்டது என்ன? என்பதை வெளிப்படுத்தியுள்ளார் அவரின் சக வீரராக பயணம் செய்த வாசிம் ஜாஃபர்.
கடந்த 2004ம் ஆண்டு இந்திய அணியில் இடம்பெற்றார் தோனி. கடந்த 2019 வரை 15 ஆண்டுகளாக அவரின் கிரிக்கெட் வாழ்க்கை இடைவெளியின்றி சென்றதுடன், பல பல உயரங்களைத் தொட்டது. ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியைச் சேர்ந்தவர்தான் தோனி.
அனைத்துவித போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டதோடு, இந்தியாவில் எந்தக் கேப்டனும் செய்யாத சாதனையாக மூன்றுவித உலகக்கோப்பை போட்டிகளிலும் கோப்பை வென்று கொடுத்தார்.
ஆனால், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்க நாட்களில் அவர் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருந்தார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் வாசிம் ஜாஃபர்.
அவர் கூறியதாவது, “தான் கிரிக்கெட் விளையாட வந்த முதலாவது அல்லது இரண்டாவது ஆண்டில் என்னிடம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, “கிரிக்கெட் விளையாடி, அதன்மூலம் ரூ.30 லட்சம் சம்பாதித்து, அந்தப் பணத்தின் மூலம் ராஞ்சியில் அமைதியான வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று சொன்னார் தோனி” என்றுள்ளார் ஜாஃபர்.
ஆனால், சாதாரணமாக ரூ.30 லட்சம் சம்பாதிக்க நினைத்தவருக்கு, காலம் பல பல கோடிகளை வாரி வழங்கிவிட்டது என்பது வேறு கதை.