லக்னோ: ஊரடங்கு அமலில் இருக்க நடைபயணமாகவே சொந்த ஊர்களுக்கு வந்த மக்கள் மீது கிருமி நாசினிகளை தெளித்த உத்தர பிரதேச அரசின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் கூலி வேலைகளுக்காக சென்ற மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேலை, உணவு இல்லாததால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடைபயணமாகவே செல்கின்றனர்.
அவர்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந் நிலையில் கால்நடையாகவே உத்தர பிரதேசம், பரேலிக்குள் நுழைந்த மக்களை போலீஸார் ஒரே இடத்தில் கூட்டமாக சாலைகளில்அமர வைத்தனர்.
அப்போது அவர்கள் மீது கிருமிநாசினியை தெளித்துள்ளனர். இந்த விவகாரம் இப்போது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. முறையாக எந்த ஏற்பாடும் செய்யாமல் மக்களை உத்தர பிரதேச அரசு நடத்துவதாக சமூக ஆர்வலர்கள் பலர் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர்.
கிருமிநாசினியை மக்கள் மீது தெளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந் நிலையில் இது பற்றி லக்னோ மாவட்ட நீதிபதி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
முதலமைச்சர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். தீயணைப்பு படை குழுவினர் பேருந்துகளை சுத்திகரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர் . சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.