சென்னை

தேசிய ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்வோருக்காக இ பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பலர் தங்களின் தேவைகளுக்காக வெளியே செல்லும்போது, காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினரின் கெடுபிடிகளுக்கு ஆளாகும் சூழல் ஏற்படுகிறது. இதனால் தமிழக அரசு அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டிலிருந்தபடியே வெளியே செல்வோருக்கு இ-பாஸ் முறையில் அனுமதி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் முதலில் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட உள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும் பட்சத்தில், https://epasskki.in/ என்ற இணைய முகவரியை தங்களது ஆண்ட்ராய்டு போனில் டைப் செய்து, அதில் தங்களது செல்போன் எண்ணை டைப் செய்தால், ஓடிபி எனும் ரகசியக் குறியீட்டு எண் கிடைக்கும்.

அந்த ரகசிய குறியீட்டு எண்ணைச் சரிபார்த்த பின், எந்தத் துறை, என்ன தேவைக்காக, எங்கு செல்லவேண்டும், விண்ணப்பதாரரின் பெயர், வெளியே செல்வதற்கான ஏதேனும் ஆவணம் இருப்பின் அதன் எண், எங்கிருந்து எங்கு செல்லவேண்டும், எந்த வகையான வாகனம், வாகனப் பதிவெண், அலுவலக போன் எண், மற்றும் விலாசம் ஆகியவற்றை ஆன்லைன் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்

அவ்வாறு அனுப்பிய பின், மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் விண்ணப்பதாரரின் விண்ணப்பம் அலுவலர்களால் பரிசீலிக்கப்படுகிறது. எனவே விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட ஆவணங்களுடன் நீங்கள் பயணிக்கத் தயாராக இருக்கும்படி குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதன் பிறகு கோரிக்கை அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு, செல்போனிற்கு அனுமதி ஒப்பம் அனுப்பப்படும் அது  கிடைத்தவுடன் அதைக் கொண்டு, அவர்கள் பயணிக்கும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது,