சென்னை
தேசிய ஊரடங்கு காரணமாக சென்னையில் வாகனங்கள் அதிகம் ஓடாததால் காற்று மாசு அளவு வெகுவாக குறைந்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த 24 முதல் ஏப்ரல் 14 வரை தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தவிர மற்றவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இன்று முதல் மளிகை மற்றும் காய்கறிக்கடைகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை பகல் 2.30 மணியுடன் மூடப்பட உள்ளது.
சென்னையை பொறுத்தவரை மக்கள் தொகையை விட வாகனங்கள் எண்ணிக்கை அதிகம் எனக் கூறலாம். தினமும் தனியார் வாகனங்கள் 30 லட்சம் மற்றும் ஆயிரக்கணக்கான அரசு வாகனங்கள், மாநகர பேருந்துகள், சரக்கு லாரிகள் எனப் பல வாகனங்கள் ஓடுகின்றன.
இந்த வாகனங்கள் வெளிப்படுத்தும் நச்சு வாயு, மாசு போன்றவை உடல் நலத்தை கெடுத்து உலக வெப்ப மயமாதலை அதிகரிக்கிறது. இதனால் உலக அளவில் பருவநிலை மாற்றம் உண்டாகிறது. ஆஸ்திரேலிய காட்டுத்தீ, இந்தியாவில் பருவநிலை தவறிப் பெய்யும் மழையால் வெள்ளப் பெருக்கு போன்றவை நிகழ இவை எல்லாம் காரணங்களாகும்.
ஊரடங்கை முன்னிட்டு சென்னையில் வாகனங்கள் ஓடுவது குறைந்து பல சாலைகள் வெறிச்சோடி காண்கிறது. அது மட்டுமின்றி மாசை அதிகரிக்கும்படி புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகளும் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன . இதையொட்டி சென்னை நகரில் காற்று மாசு வெகுவாக குறைந்து வருவதாக மாடுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் அதிக மாசு உள்ள வடசென்னையைச் சேர்ந்த ஒருவர், “ ஊரடங்கின் காரணமாகக் காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது. இதற்குப் பிறகும் நாட்டில் மாதா மாதம் ஒரு ஞாயிறு அன்று முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் காற்று மாசு வெகுவாக குறையும்.” எனத் தெரிவித்துள்ளார்.