தேனி:
தேனி அருகே வெளிநாட்டில் இருந்து வந்த நபர் கொரோனா வைரஸ் தொற்று சோதனையைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டார்.
இதனால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அந்த இளைஞர், தெருவில் படுத்திருந்த மூதாட்டியின் கழுத்தை கடித்து குதறியுள்ளார். இதில் அந்த மூதாட்டி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கருப்பசாமி கோயில் காந்திஜி காலனி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அவ்வப்போது இலங்கை உள்பட சில நாடுகளுக்கு ஜவுளி எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வருவார். அதுபோல சமீபத்தில், இலங்கைக்கு சென்றுவிட்டு கடந்த வாரம் (24ம் தேதி) தமிழகம் திரும்பினார். அவரை சோதனை செய்த மருத்துவர்கள், அவரது கையில் முத்திரையிட்டு 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து வீட்டில்தனிமையில் இருந்த மணிகண்டன் மன அழுத்ததால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாலை, வீட்டில் இருந்து திடீரென நிர்வாணமாக வெளியே ஓடி வந்த மணிகண்டன், சாலையோரம் படுத்திருந்த நாச்சியம்மாள் என்ற மூதாட்டியின் கழுத்தில் கடித்து குதறியுள்ளார்.
நாச்சியம்மாள் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, மணிகண்டனை மீட்டு, அடித்த உதைத்து கட்டி வைத்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்த நாச்சியம்மாளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இது தொடர்பான விசாரணையை அடுத்து, மணிகண்டனுக்கு மனநிலை பாதித்து இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.