சிங்கப்பூர்
உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதால் ஆணுறை உற்பத்தி நின்று போய் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளில் மலேசியா கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 2161 பேர் பாதிக்கப்பட்டு 26 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதையொட்டி வரும் 14 ஆம் தேதி வரை முழு அடைப்பு அமலாக்கப்பட்டுள்ளது. இதனால் மலேசியாவில் பல தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
இவற்றில் ஆணுறை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையான காரெக்ஸ் தொழிற்சாலையும் ஒன்றாகும். இங்குத் தயாரிக்கப்படும் ட்யூரெக்ஸ் போன்ற ஆணுறைகள் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களாக இந்த தொழிற்சாலை முழுவதுமாக மூடப்பட்டு உற்பத்தி முழுவதுமாக நின்றுள்ளது.
இது குறித்து இந்த நிறுவன தலைமை அதிகாரி கோ மியா கியாட், “மலேசியாவில் உள்ள எங்கள் தொழிற்சாலையில் உலகில் அதிக அளவில் ஆணுறை தயாரிக்கப்படுகிறது. அடுத்ததாகச் சீனாவில் தயாரிக்கப்படுகிறது. சீனா, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எனவே உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளிலும் ஆணுறை தட்டுப்பாடு உண்டாகி வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.