பெங்களூரு:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் இன்று உயிரிழந்த நிலையில், அவர் எந்தவொரு வெளிநாடுகளுக்கும் சென்று வராத நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு ரயில்மூலம் டெல்லிக்கு சென்று வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதனால், அந்த ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
கர்நாடகா மாநிலம் துமகுரு பகுதியைச் சேர்ந்த 60 வயது நபர் ஒருவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை கர்நாடக சுகாதாரத் துறை டிவிட்டரில் அறிவித்து உள்ளது.
இந்த நபர், சமீபத்தில் எந்தவொரு வெளிநாட்டு பயணங்களுக்கும் செல்லாத நிலையில், கடந்த 5 ஆம் தேதி சம்பர்க் கிரந்தி எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லிக்குச் சென்று மார்ச் 11 அன்று திரும்பியது தெரிய வந்ததுள்ளது. இதற்கிடையில், டெல்லியில் மார்ச் 7 ஆம் தேதி டெல்லியின் நிஜாமுதீன் நிலையத்திற்கு வந்து ஜாமியா மஸ்ஜித்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர். மார்ச் 11 ஆம் தேதி மீண்டும் ரயிலில் ஏறி பெங்களூரு யேஷ்வந்த்பூருக்கு வந்தார். அங்கிருந்து மார்ச் 14 ஆம் தேதி தனது சொந்த ஊரான சிராவுக்கு பஸ்ஸில் சென்றார்.
இவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 18ந்தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், மருந்துகளுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டார், ஆனால் அவரது நிலை மோசமடைந்தது. பின்னர் கடந்த 23ந்தேதி அனறு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால், அவர் அதை ஏற்க மறுத்து மீண்டும் தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து இன்று காலை 10.30 மணியளவில் அவர் இறந்தார்.
இதைத்தொடர்ந்து, அந்த நபருடன் நேரடி தொடர்பு கொண்ட 24 பேரை சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது. அவர்களில் 13 பேர் மருத்துவமனையில் உள்ளனர், எட்டு பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், அவர் டெல்லிக்கு சென்று வந்தபோது, அவருடன் ரயிலில் பயணித்த அனைத்து பயணிகளும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு நோய் தொற்று சோதனை நடத்தப்படும் என்றும், துமகுருவின் துணை ஆணையர் கே.ரகேஷ் குமார் தெரிவித்து உள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே, 70 வயதான ஒரு பெண்ணும், 76 வயது ஆணும் பலியான நிலையில், இன்றைய இறப்பையும் தொடர்ந்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 17 பேர் பலியான நிலையில்,700 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.