ஏலூரு
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஏலூரு துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் கையுறை முகககவசம் போன்றவை அளிக்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக அனைத்து நகராட்சிகளும் தீவிரத் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கிருமி நாசினிகளான மருந்து தெளிப்பான், பிளீச்சிங் பவுடர் தூவுதல் போன்ற நடவடிக்கைகளைத் துப்புரவுத் தொழிலாளர்கள் மூலம் அனைத்து நகராட்சிகளும் செய்து வருகின்றன.
அவ்வகையில் ஆந்திர மாநிலம் ஏலூரு நகராட்சியில் உள்ள 50 வட்டங்களிலும் கிருமி நாசினி மற்றும் துப்புரவு பணிகளை உடனுக்குடன் துப்புரவு தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த திங்கள்கிழமை அன்று துப்புரவுத் தொழிலாளர்கள் அனைத்து தெருக்கள் மற்றும் தெரு முனைகளில் பிளீச்சிங் பவுடரை தெளிக்கும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த பணி முடிந்த பிறக் பலருடைய கைகளில் புண்கள் ஏற்பட்டுள்ளன. இவை பிளீச்சீங் பவுடரில் உள்ள ரசாயனத்தால் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் போது அளிக்க வேண்டிய கையுறைகள் மற்றும் முக கவசங்கள் இவர்களுக்கு வழங்கப்படாததால் இவர்களில் சிலருக்கு கைகளில் புண்கள் உண்டாகி சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து துப்புரவாள்ர் சங்க தலைவர் சோமையா புத்தா, “கொரோனா முன்னெச்சரிக்கையாக ஏலூரு நகராட்சியின் 50 வட்டங்களிலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எங்களுக்கு இந்த பணிகளுக்கு அளிக்க வேண்டிய கை உறை, முகக் கவசம் போன்ற எதுவும் அளிக்கப்படாததால் எங்களில் பலர் பாதிப்பு அடைந்துள்ளனர். உடனடியாக அரசு எங்களுக்கு இவற்றை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏலூரு நகராட்சி ஆணையர் சந்திரசேகர், “நாங்கள் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பு பொருட்களையும் வழங்கி வருகிறோம். இந்த நிகழ்வின் போது அவர்கள் அதைப் பயன்படுத்தத் தவறி இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள துப்புரவுத் தொழிலாளி வெங்கடேஸ்வர ராவ், “எங்களுக்கு கை உறை முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் இதுவரை அளிக்கப்பட்டதில்லை. ஒரே ஒரு முறை பயன்படுத்தப்பட்ட ஓட்டையான கையுறைகளை கொடுத்துள்ளனர். அதைப் பயன்படுத்திய போதும் எங்கள் கைகளில் புண்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிகழ்வின் போது நாங்களே மருத்துவரிடம் சென்று எங்கள் சொந்த செலவில் சிகிச்சைகள் பெற்றுக் கொண்டோம்” என தெரிவித்துள்ளார்.