சென்னை :
சீனாவின் வுஹானில் தொடங்கி உலகின் அனைத்து மூலையிலும் பரவி மனித உயிர்களை கொன்று, உலகை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸை ஒழிக்கவும், அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் பல்வேறு நாடுகள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றன.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழும் சீனாவில், இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, மக்களை வீடுகளுக்குள்ளேயே முடக்கி, அவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று சேர்த்து வருகிறது, உலகில் மக்கள் தொகையில் முன்னணியில் இருக்கும் சீன அரசு.
இதேபோன்று, ஊபர், ஓலா மற்றும் பெங்களூரை சேர்ந்த சூம் கார் நிறுவனங்கள் பயன்படுத்தும் செயலியை போன்றதொரு செயலியை கொரோனாவால் பாதிக்கபட்ட வர்களையும் வெளிநாட்டினர் நடமாட்டத்தையும் கண்காணிக்க பயன்படுத்தி வருகிறது வியட்நாம் அரசு. இது மக்கள் நடமாட்டத்தையும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை கண்காணிக்கவும் சிறந்த பயனளிப்பதாக கூறிவருகின்றனர்.
தற்போது, தமிழகத்தில் இதேபோன்ற ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு, பிக்சான் செயற்கை நுண்ணறிவு தீர்வுகள் (Pixxon AI Solutions) என்ற நிறுவனம் இந்த செயலியை ரோஹித் நாதன் ஐ.பி.எஸ். அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் வடிவமைத்துள்ளது. மெக்கானிக்கல் எஞ்சினீரான ரோஹித் நாதன் ஐ.பி.எஸ். இதற்கு முன் பல்வேறு மென்பொருள் செயலிகளை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செயலி, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தரவுகள் ஓர் இடத்தில் ஒருமுகப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படும். ஒவ்வொருவரையும் நிகழ்நேர / குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணிக்கவும், அவர்களின் தற்போதய நிலை, இருப்பிடம் மற்றும் தனிமைப்படுத்தியிருப்பதைப் பற்றி உடனுக்குடன் புதுப்பிக்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட நபர் வேறு இடத்திற்கு செல்ல முயற்சித்தால் அது எச்சரிக்கைகளை அனுப்ப வல்லது.
கொரோனா வைரஸ் அச்சத்தில் இருந்து மீள தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளில் இந்த செயலியின் அறிமுகம் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.