சென்னை:
தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் மக்கள், அரசின் உத்தரவை மதிக்காமல் நடமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சில இடங்களில் காவல்துறையினர் மக்கள் கூடுவதை தவிர்த்த நிலையில், பல இடங்களில் பொதுமக்கள் எப்போதும் போல நடமாடி வந்தனர். பெரும்பாலான கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. டீக்கடைகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
இது சர்ச்சைகைளை ஏற்படுத்திய நிலையில், இன்று மாலை 5 மணி முதல் டீக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, பெரும்பாலான இடங்களில் செயல்பட்டு வந்த கடைகளை மூடவும் சாலைகளில் காணப்பட்ட நபர்களையும் விரட்டியடித்து வருகின்றனர். மக்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் நடமாட்டத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த பல இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்களை மட்டும் போலீசார் அனுமதிக்கின்றனர். தேவையின்றி வெளியே பயணிக்கும் நபர்களை சோதனை செய்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைக்கின்றனர். இது தொடரும் என்று காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.