புதுடெல்லி: உறுதிசெய்யப்பட்ட (கன்ஃபார்ம்) ரயில் டிக்கெட்டுகளுக்கான தொகை தானியங்கு முறையில் திரும்ப வழங்கப்படும் என்றும், ரயில்வே சார்ந்த தயாரிப்பு யூனிட்டுகள் கோவிட்-19 பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அத்தியாவசியப் பொருட்களைத் தயாரிப்பதற்கு திறந்துவிடப்படும் என்றும் இந்திய ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு, மார்ச் 31 வரை நாடு முழுவதும் ரயில்வே சேவைகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் சார்பில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, தங்கள் பயணத்திற்காக டிக்கெட் முன்பதிவுசெய்து கன்ஃபார்ம் செய்து, அதேசமயம் அந்த ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தால், ஆன்லைனில் தங்களின் டிக்கெட்டை ரத்துசெய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கான ரத்துசெய்யப்பட்ட முழு டிக்கெட் கட்டணம் தானியங்கு முறையில் திரும்ப செலுத்தப்படும்.
மேலும், கவுன்டர்களில் எடுத்த டிக்கெட்டுகளை ரத்துசெய்வதற்கான தேதி ஜுன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனது தயாரிப்பு யூனிட்டுகளை கொரோனா தொற்று நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களைத் தயாரிப்பதற்கு திறந்துவிடுவதாக ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.