ஸ்ரீநகர்:
இன்று விடுதலை செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர், தனது விடுதலை குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு தடுப்பு காவலில் அடைக்கப்பட்டதற்கும், தற்போதுள்ள நிலைமையும் மிகவும் மாறுப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5ந்தேதி ரத்து செய்யப்பட்டது. முன்னதாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள், முக்கிய தலைவர்கள் என ஏராளமானோர் பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் பலர் அவ்வப்போது விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒமர் அப்துல்லா விடுவிக்கப்பட்டார். அவர் விடுதலையை அவரது கட்சியினரும், ஆதரவாளர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், தனது விடுதலை குறித்து ஒமர் அப்துல்லா டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில், 232 நாட்களுக்கு பிறகு எனது தடுப்பு காவல் முடிவுக்கு வந்துள்ளது. இறுதியாக ஹரி நிவாசிலிருந்து வெளியேறினேன். கடந்த ஆண்டு ஆகஸ்டு 5ந்தேதி இருந்த உலகம் தற்போது மிகவும் மாறுப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
மற்றொரு டிவிட்டில், தனது தாய் தந்தையுடன் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு, 8 மாதத்திற்கு பிறகு இன்று தனது பெற்றோருடன் மதிய உணவு சாப்பிடுகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.
விடுதலைக்குபிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, விடுதலையான பிறகு, கொரோனா வைரஸ் பரவலை எதித்து போராட வேண்டும், சமூக தூரத்தை பராமரிக்கவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஆகஸ்ட் 5 நிகழ்வுகளில் நடைபெற்றது என்ன என்பது குறித்து பின்னர் பேசுவதாகக் தெரிவித்தவர், இப்போது வைரஸுக்கு எதிரான இந்த வாழ்க்கை மற்றும் மரணப் போராக இருக்க வேண்டும்; அனைத்து கைதிகளையும் விடுவிப்பதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.