சென்னை: அரசின் அறிவுறுத்தலை மீறி, தனியார் பள்ளிகள் மாணாக்கர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கைகள் பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வரும் மார்ச் 31ம் தேதி வரை, 11 & 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தவிர, வேறு எந்தவித வகுப்புகளும் நடத்தப்படக்கூடாது என்று தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டது.

ஆனால், இந்த உத்தரவை பல இடங்களில், தனியார் பள்ளிகள் வழக்கம்போல மீறுவதாய் புகார்கள் வரிசை கட்டுகின்றன. தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பனின் கவனத்திற்கும் இந்தப் புகார்கள் சென்றன.

இந்நிலையில், “அரசின் உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை முதன்மைக் கல்வி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். விதிமுறையை மீறும் பள்ளிகளின் அங்கீகாரம் நிரந்தரமாக ரத்துசெய்யப்படுவதுடன், சம்பந்தபட்ட பள்ளிகளின் நிர்வாகிகள் மீது, தொற்றுநோய் பரவல் சட்டத்தின்கீழ் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

மாணாக்கர்களின் நலனில் அக்கறை கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும். சமூகப் பொறுப்பை பள்ளிகளும் உணர வேண்டும்” என்று எச்சரித்து அறிவுறுத்தியுள்ளார்.