சீனா :
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 14641 பேரை பலி வாங்கி இருக்கிறது, இத்தாலியில் மட்டும் இதுவரை 5476 பேர் இறந்துள்ளனர்.
சீனாவின் வுஹான் பகுதியில் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் சீனாவில் பல உயிர்களை பலி வாங்கியது, உலக நாடுகளின் ஆதரவு கரங்களை பெரிதும் நாடாமல் தங்களின் கடின முயற்சியில் தற்போது இதனை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்திய தெம்புடன், பல்வேறு உலக நாடுகளுக்கு தன் ஆதரவு கரத்தை நீட்டி இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், 300 பேர் கொண்ட சீன மருத்துவ குழு ஒன்று இத்தாலியில் மருத்துவ சேவை செய்ய தேவையான உபகரணங்களுடன் சென்றிறங்கியது. அந்நாட்டில், மக்கள் தங்கள் தேசிய கீதம் முழங்க இவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
மேலும், நேற்று கிரேக்க நாட்டு தலைநகர் ஏதென்ஸ்-க்கு மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை அனுப்பிவைத்தது.
சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப் பட்டிருந்தாலும் உள்நாட்டு தேவையையும் சமாளிக்க வேண்டிய நிலையில், மேலும் உதவிப்பொருட்களை விரைவில் தயாரித்து அனுப்புவதாக உறுதியளித்துள்ளது.
உலக வல்லரசுகளையே ஆட்டம் காண செய்துகொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து சீனா மீண்டதோடல்லாமல், மற்ற நாடுகளுக்கும் உதவ தொடங்கி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.