திருவனந்தபுரம்
கொரோனா எச்சரிக்கையை மீறி கேரளாவில் திருவிழா கூட்டங்கள் நடத்திய கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கேரளாவில் கண்டறியப்பட்டார். அதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நாடெங்கும் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300 ஐ நெருங்கி வருகிறது கொரோனா பரவுவதைத் தடுக்க அதிக மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் உள்ள மலயின்கீழு கிருஷ்ண சாமி கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்ட ஊர்வலம் ஒன்றைக் கோவில் நிர்வாகம் நடத்தி உள்ளது. அதையொட்டி இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்த கோவில் நிர்வாகிகள் மீது நேற்று கேரள அரசு வழக்குப் பதிந்துள்ளது.
இதைப் போல் வெல்லயானி தேவி கோவிலில் 70 நாட்கள் நடந்த திருவிழாவின் இறுதி தின ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்த கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் என 100 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதைப் போல் கண்ணூர் பகுதியில் ஒரு கோவில் மற்றும் 5 மசூதிகளில் கூட்டங்கள் நடத்தியதற்காக நிர்வாகிகள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.