டில்லி
பாடகி கனிகா கபூர் சென்ற இடங்களைத் தேடி ஆயிரம் பேர் கொண்ட குழு அலைகின்றது.
லண்டனில் இருந்து கொரோனா வைரசைத் தொற்றிக்கொண்டு இந்தியா வந்த இந்திப்பாடகி கனிகா கபூர், ஒரு பிரளயத்தையே உருவாக்கி விட்டார்.
லக்னோவில் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த கனிகா அங்கு மூன்று விழாக்களில் பங்கேற்றார்.
ஒரு நிகழ்ச்சியில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா, அவரது மகனும், மக்களவை உறுப்பினருமான துஷ்யந்த் உள்ளிட்டோர், கனிகாவுடன் விருந்துண்டுள்ளனர்.
கனிகாவின் தொற்று அவர்களுக்குத் தெரியாத நிலையில்-
துஷ்யந்த் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டார். சில நிலைக்குழு கூட்டங்களில் சக எம்.பி.க்களுடன் பங்கேற்று உரையாடினார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது மாளிகையில் அளித்த விருந்தில், 95 எம்.பி. க்களுடன் கலந்து கொண்டு காலை சிற்றுண்டி அருந்தினார்.
அதன் பிறகுதான் கனிகாவுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவர-
வசுந்தரராஜேயும், துஷ்யந்தும் தங்களைத் தனிமைப் படுத்திக்கொண்டனர். (பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது நேற்று தெரியவந்துள்ளது).
துஷ்யந்துடன் பழகிய பல எம்.பி.க்களும், தங்களை தனிமைப் படுத்திக்கொண்டதோடு, கொரோனா பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர்.
லக்னோவில் யாருக்கெல்லாம், கனிகா கொரோனைவை பரவ விட்டார் என்பதைக் கண்டறியும் பணியில் நூறு படைகள் ஈடுபட்டுள்ளன.
உள்ளாட்சி ஊழியர்கள், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட ஆயிரம் பேர் இந்த படையில் இடம் பெற்றுள்ளனர்.
கனிகா காலடி பட்ட இடங்களில் எல்லாம் தேடித்தேடி, அவர் சந்தித்த ஆட்களை எல்லாம் துருவி எடுத்து வருகிறது, இந்த ‘டீம்’.