கலிபோர்னியா:
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது.
சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய வைரஸ் தொற்றால் அந்நாட்டில் இதுவரை 3ஆயிரத்து 255பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்தபோதிலும் ஐரோப்பிய நாடான இத்தாலியில் அதன் தீவிரம் அதிகரித்து வருகிறது. இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 793 பேர் மரணமடைந்துள்ளனர். அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் பலி எண்ணிக்கை ஆயிரத்து 378ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 285பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றனர். உலகளவில் நீடிக்கும் கொரோனாவின் தாக்கத்தால் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 94ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்படி, நேற்று ஒரே நாளில் 60க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 315பேரில் 39பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 63பேரும் கேரளாவில் 40பேரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். டெல்லியில் 27 பேர், உத்தரப்பிரதேசத்தில் 24பேர், தெலங்கானாவில் 21பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் நான்கரை வயது பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உலகை மிரட்டிவரும் இந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை 4பேர் உயிரிழந்திருக்கின்றனர்.