சென்னை:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பெரும் தொழில் நிறுவனங்கள் முதல், சிறுதொழில்நிறுவனங்கள் வரை அனைத்து தொழில் நிறுவனங்கள் மற்றும்  கட்டுமான தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் உணவுக்கு திண்டாடும் சூழல் உருவாகி உள்ளது. அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று, தமிழக முதல்வருக்கு தேசிய கிராம தொழிலாளர்கள் சங்கத் தலைவர் வாழப்பாடி கர்ணன், தேசிய பொதுச்செயலாளர் வாழப்பாடி இராம சுகந்தன் ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் பொருளாதார மந்தநிலை காரணமாக ஏற்கனவே தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக கட்டுமானத் தொழில் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக கட்டுமானம், அமைப்புசாரா மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். தினக்கூலியை வைத்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வரும் அவர்களுக்கு தற்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, முற்றிலும் வேலைவாய்ப்பு இல்லாத நிலை உருவாகி பட்டினி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவரும் தமிழகஅரசு, கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அதன்படி,

1) கட்டுமான பணி தொழிலாளர்கள், ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000 என்ற விதத்தில் நிவாரண தொகை வழங்க வேண்டும்.

2) அவர்களின் குடும்ப அட்டைக்கு ஏற்ப நியாயவிலை கடைகளில் கூடுதலாக 50% உணவு பொருட்கள் வழங்க உத்தரவிட வேண்டும்.

மேலும், கட்டிட தொழிலாளர் நலவாரியம், அமைப்புச் சாரா தொழிலாளர் நலவாரியம், கிராமத் தொழிலாளர் நலவாரியங்களில் மாதாந்திர பென்சன் பெறும் தொழிலாளர்களுக்கும், இந்த நிவாரணங்கள் வழங்குவதன் மூலம், வயது முதிர்ந்த தொழிலாளர்கள் கஷ்டப்படாமல் இருப்பதற்கு மேலும் உதவியாக இருக்கும்.

ஏற்கனவே கட்டிட தொழிலாளர் நலவாரியம், அமைப்புச் சாரா தொழிலாளர் நலவாரியம், கிராமத் தொழிலாளர் நலவாரியங்களில் வைப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்தும் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

தமிழகஅரசு இந்த கோரிக்கையை சு கவனத்தில் கொண்டு, விரைவில் ஆவன செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனம் தலைவர் வாழப்பாடி கர்ணன், இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனத்தின் தேசிய பொதுச்செயலாளர் வாழப்பாடி இராம சுகந்தன் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.